Ashtanga Yoga – அஷ்டாங்க யோகம் என்பது எட்டு வகையான யோகங்கள் அதாவது எட்டு ராஜயோகங்ள், இதை பதஞ்சலி முனிவரின் ‘யோக சூத்திரம்’ என்று கூறுவதுண்டு.
தமிழகத்தில் வாழ்ந்த பதஞ்சலி முனிவரால் உலகுக்கு தந்த ஞானமே அஷ்டாங்க யோகம் என படக்கூடியது. அஷ்டம் என்பதற்கு எட்டு என்று அர்த்தம். அஷ்டாங்க யோகம் என்பது எட்டு வகையான யோகங்கள் அதாவது எட்டு ராஜயோகங்களை குறிப்பதாகும். இதை பதஞ்சலி முனிவரின் ‘யோக சூத்திரம்‘ என்றும் கூறுவதுண்டு.
எட்டு வகையான அஷ்டாங்க யோகம் என்பது
- இயமம் (வாழ்வியல் / தார்மீக நெறிமுறைகள்)
- நியமம் (சுய தூய்மை)
- ஆசனம் (தோரணை)
- பிராணாயாமம் (சுவாச கட்டுப்பாடு)
- பிரத்தியாகாரம் (உணர்வு கட்டுப்பாடு)
- தாரணை (செறிவு)
- தியானம் (தியானம்)
- சமாதி (பிரபஞ்சத்தில் ஐக்கியமாதல்)
ஆகிய எட்டு நிலைகளைக் குறிக்கக் கூடியதே அஷ்டாங்க யோகம். இவற்றில்
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம் ஆகியவை புறத் தூய்மையை குறிக்கக்
கூடியது. பிரத்தியாகாரம், தாரணை, தியானம் ஆகியவை அகத்தூய்மையும், சமாதி
என்பது யோக நிலையையும் குறைக்கக் கூடியதாக உள்ளது.
அஷ்டாங்க யோகத்தின் எட்டு உறுப்புகள்
இயமம் – உங்களால் தலை உச்சியின் மேல் கவனம் வைத்து தியானம் செய்து, அதில் கிடைக்கும் மகிழ்வை உணர முடிகிறதா? அந்த மகிழ்வை உணர்ந்தால் நீங்கள் வானுலகில் உள்ள தேவர்களை விட மேலானவர்கள் என்று திருமூலர் சொல்கிறார். வானுலகத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதை விட நமது உச்சியில் ஊறும் அமுது மேலானது. அவர்களால் அகத்தில் ஊறும் அமுதைக் கடைந்து எடுக்கும் வழி தெரியவில்லை, அதனால் புற உலகின் அமுதத்தை நாடினார்கள். தேவர்களுக்கும் தெரியாத அந்த வழியை, அகத்தியானம் செய்யும் முறையை, திருமூலர் நமக்குச் சொல்லித் தருகிறார். அட்டாங்கம் என்றால் எட்டு உறுப்புக்கள் என்று அர்த்தம்.
அட்டாங்க யோகத்தின் எட்டு உறுப்புக்கள் – இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவை ஆகும்.
இயமம் என்பது தீய எண்ணங்கள், தீய செயல்கள் ஆகியவற்றை விலக்குவது. ஒழுக்க நெறியை நாடி அதில் தொடர்ந்து நிற்பது நியமம். அடுத்து பயல வேண்டியது பல வகைப்பட்ட ஆசனங்கள். ஆசனங்கள் கற்ற பிறகு பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி. அடுத்த பாடம் பிரத்தியாகரம் என்னும் மனத்தை உள்நோக்கித் திருப்பும் பயிற்சி. உள் நோக்கித் திரும்பும் மனத்தை அங்கேயே நிலை நிறுத்தும் பயிற்சி தாரணை ஆகும். மனம் அகத்திலே நிலை பெற்றால் தியானப் பயிற்சி சாத்தியமாகும். தியானத்திலே நிலைபெறப் பயின்றால் சமாதி நிலை அடையலாம். சமாதி என்பது பூரண நிலை. நமது மூலாதாரத்தில் (குறிக்கு இரு விரல் அளவு கீழே) இருக்கும் குண்டலினி வடிவிலான சக்தி, நமது தலையின் உச்சியில் இருக்கும் சிவனைச் சென்று சேர்வது சமாதி நிலையாகும். இயமமும் நியமமும் இல்லாமல் மற்ற பயிற்சிகள் சாத்தியமில்லை. சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும் சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றே சமாதி யமாதி தலைப்படுந் தானே. – (திருமந்திரம் – 618) இயமம், நியமம் முதலியவற்றைக் கடைப்பிடிப்பவர்களால் சமாதி வரை செல்ல இயலும். இயமம், நியமத்தில் ஆரம்பித்து சமாதி வரை சென்றவர்கள் அட்டமாசித்திகளை அடைவார்கள். இயமம் முதல் சமாதி வரையிலான அட்டாங்க யோகத்தில் நிலைத்து நிற்பவர்களே யோகத்தின் பூரண நிலையை அடைய முடியும். பிராணாயாமப் பயிற்சி செய்பவர்களுக்கு திருமூலரின் அட்டாங்கயோகம், இன்னும் சிறந்த அனுபவத்தை நோக்கி நகர உதவும். சிறு வயதில் நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரெண்டு அங்குல நீள அளவில் இயங்கும். வயது ஏற ஏற சுவாசிப்பின் நீளம் குறைகிறது. யோகப்பயிற்சியின் நோக்கம் சுவாசிப்பின்நீளத்தை மறுபடியும் பன்னிரெண்டு அங்குல நீளத்திற்கு கொண்டு வருவதாகும். முறைப்படி தொடர்ந்து பிராணாயாமப் பயிற்சி செய்பவர்களுக்கு, கள் உண்ணாமலே மகிழ்வு உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும், சோம்பல் நீக்கிச் சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் என்று திருமூலர் சொல்கிறார். அரைகுறையாகப் பயிற்சி செய்யும் நானே இதை அனுபவ உண்மையாக உணர்கிறேன். யோகம் பயில்பவர்களுக்கு திருமூலர் சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறார். திருமூலரின் அட்டாங்கயோகத்தை வெறுமனே படிப்பதால் உபயோகம் இல்லை, பயிற்சியும் அவசியம். தொடர்ந்த பயிற்சியும், நமது குருநாதரான திருமூலரின் வழிகாட்டுதலும், நம் மனத்தையும் புத்தியையும் செம்மைப் படுத்தும். ஆன்மிகம் தவிர்த்துப் பார்த்தாலும் அட்டாங்கயோகப் பயிற்சி நம்மை இன்னும் சிறந்த மனிதனாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.
கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத் திடையில்நின் றானே. – (திருமந்திரம் – 554)
விளக்கம்:
இயமம் என்பது தீயவற்றைச் செய்யாமல் விடுதல் ஆகும். இது யோக வழியின் முதல் நிலை. இயமத்தை மேற்கொள்பவர் ஓர் உயிரையும் கொல்ல மாட்டார். பொய் சொல்ல மாட்டார். திருட மாட்டார். பிறரை மதிக்கும் நல்ல குணம் உள்ளவர், நல்லவர், அடக்கமுடையவர். நடுவு நிலையில் நிற்க வல்லவர். தன் பொருளை பிறர்க்குப் பகிர்ந்துது தருபவர். குற்றம் இல்லாதவர், கள் காமம் தவிர்த்தவர்.
எண் – மதிப்பு, மாசிலான் – குற்றம் இல்லாதவன், கட்காமம் – கள், காமம்