“நல்லவர் வல்லவர்”
நாட்டிலே நல்லவர்கள் எல்லாம் வல்லவர்களாக இருத்தல் அரிது. அப்படியே வல்லவர்கள் எல்லாம் நல்லவர்களாக இருத்தல் அரிதினும் அரிது. நல்லவராகவும், வல்லவராகவும் வல்ல ஒருவர் கிடைத்து விடுவாரானால் அப்படிப்பட்டவரைப் போற்றிப் புகழ்வது மக்கள் கடமையாகும். அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகுவதற்கு அது ஒன்றே வழி.
எனது வாழ்நாளிலே நிலப்பிரபுக்களாகவும், தொழிலதிபர்களாகவும், வங்கி உரிமையாளர்களாகவும் உள்ளவரோடு கலந்து பழகும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன். அவர்களிலே தலைசிறந்தவர் திரு.நா.மகாலிங்கம் ஆவார். திருக்குறள் தந்த திருவள்ளுவரே ‘ இருவேறு உலகத்தியற்கை ‘ என்று கூறினார். இதற்குச் சான்றாக ‘திருவேறு தெள்ளியராதலும் வேறு’ என்று கூறினார். ஆம்! செல்வமும், சான்றாண்மையும் ஒருவரிடம் சேர்ந்து இருத்தல் அரிதென்கிறார் திருவள்ளுவர். இப்படி அவர் சொன்னது இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர். ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்பது தமிழினத்துச் செல்வந்தர்களின் பண்பாடாகச் செழித்திருந்த காலம் அது. இன்றைய செல்வந்தர்களில் மிகப் பெரும்பாலோரின் நிலை வேறு விதமானது. தான் பெற்றசெல்வத்தின் பயன் தானே துய்த்தல் என்பதுதான் இன்றைய செல்வந்தர்களின் பண்பாடாகி விட்டது. இதற்கு மாறாகவும் சிலர் இருக்கிறார்கள் என்பது நமக்கு ஆறுதல் தரும் செய்தியாகும்.
திரு.நா. மகாலிங்கம் அவர்களைக் கால் நூற்றாண்டு காலமாக நான் அறிவேன். அவருடைய தந்தையார் திரு. நாச்சிமுத்துக் கவுண்டர் அவர்களோடு தான் முதன் முதலில் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அவர் தேச பக்தர். தேச பக்தியுள்ள குடும்பத்தின் நல்ல தலைவர். அந்த வகையில்தான் அவரோடு எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. அப்போது நண்பர் திரு. மகாலிங்கம் அவர்கள் மாணவப் பருவத்தினர்.
1950க்குப் பின்னர் மகாலிங்கத்தோடும் எனக்கு நட்பு ஏற்பட்டது. அவர் தமிழரசுக் கழகத்தில் சேர்ந்து புதிய தமிழகம் படைக்கும் புனிதப் பணியிலே ஆர்வமாகப் பங்கு கொண்டார். அப்போது நான் காங்கிரஸில் இருந்தேன் என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும். காங்கிரஸ் குடும்பத்தைச் சார்ந்தோர் என்ற முறையில்தான் அன்பர் மகாலிங்கம் தமிழரசுக் கழகத்தோடும் தொடர்பு கொண்டார். தமிழரசுக் கழக மாநாடு ஒன்றையும் தமது பொறுப்பிலே சிறப்பாக அவர் நடத்தியது இன்னமும் எனது நினைவிலிருக்கிறது.
1952-ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக நடந்த பொதுத் தேர்தலிலே நண்பர் மகாலிங்கம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பினார். அவர் விரும்பினார் என்பதைவிட, அவரது தந்தையார் விரும்பினார் என்பதே பொருந்தும். ஆயினும் வேட்பாளர் தகுதி பெறுவதிலே காங்கிரசுக்குள்ளேயே கடுமையான போட்டி இருந்தது. செல்வாக்குடைய காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் பொள்ளாச்சித் தொகுதியில் அன்பர் மகாலிங்கத்துடன் போட்டி போட்டுக்கொண்டு பொள்ளாச்சித் தொகுதியைக் கோரினார். அப்போது அந்தத் தொகுதியிலிருந்த தமிழரசுக் கழகத் தோழர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் ஊழியர்களில் மிகப் பெரும்பாலோர். இளைஞர் மகாலிங்கம் அவர்களே காங்கிரஸ் வேட்பாளராவதை விரும்பினர். அப்படியே நடந்தது.
தேர்தல் களத்திலும் போட்டி பலமாக இருந்தது. தமிழரசுக் கழக முன்னணிப் பேச்சாளர்களிலே பலர் என் அனுமதியை எதிர்பாராமலேயே பொள்ளாச்சித் தொகுதியில் முகாமிட்டு அன்பர் மகாலிங்கத்தின் வெற்றிக்காகப் பிரச்சாரம் செய்தனர். இது நிகழ்ந்தது இன்றைக்கு இருபதாண்டுகளுக்கு முன்பு.
திரு. மகாலிங்கம் அவர்கள் பெரும் தொழிலதிபராக விளங்குவது அண்மைக் காலத்திலே. ஆனால் அவர் என்னோடும், தமிழரசு இயக்கத்தோடும் நெருங்கிய தொடர்பு கொண்டது அவருடைய மாணவப் பருவத்திலே. ஆம்! தொழிலதிபர் என்பதற்காக அவரோடு நான் தொடர்பு கொள்ளவில்லை. தேச பக்தியுள்ள குடும்பத்தில் பிறந்தவர் என்பதினாலேயே அவருடையத் தொடர்பை விரும்பி ஏற்றேன். இந்தியா முழுவதிலும் செல்வாக்குப் பெற்றுள்ள பெரும் தொழிலதிபராக அவர் வளர்ந்துள்ள நிலையிலும் எங்களுடைய நட்பு தொடர்கிறது. துண்டித்துப் போகவில்லை. பெரும் தொழிலதிபராக இல்லாத இளமைப் பருவத்திலே அவரிடம் என்னென்ன நல்ல குணங்களை எல்லாம் நான் கண்டேனோ, அவை அனைத்தையும் கடந்த கால் நூற்றண்டுக் காலமாக தொடர்ந்து அவரிடம் கண்டு வருகிறேன். அந்த நல்ல குணங்கள் நாளொரு மேனியாக அவரிடம் வளர்ந்து வருவதையும் கண்டு மகிழ்ந்து வருகிறேன் செல்வம் அவரது மனத்திலே செருக்கை வளர்க்கவில்லை. அதனால்தான் அவரோடு எனக்குள்ள நட்பு நீடிக்கிறது. அன்பர் மகாலிங்கம் தம்முடைய நல்ல குணங்கள் காரணமாகவே காங்கிரசிலிருந்து வெளியேற வேண்டியவரானார். அந்த வகையாலும் எங்களுக்குள் ஒற்றுமை நிலவுகிறது.
காங்கிரசிலிருந்தபோதும் பெரும்பாலான காங்கிரஸ் காரர்களின் மனப்போக்குக்கு மாறாக அன்பர் மகாலிங்கம் தனது தாய் மொழியான தமிழிடத்துப் பற்று கொண்டவரானார். தமிழின் வளர்ச்சிக்கும், தமிழினத்தின் தனி நலங்களுக்கும் காங்கிரஸ்காரர்கள் பாடுபட்டாலொழிய தமிழ் மண்ணிலே காங்கிரஸ் என்னும் பெருமரம் தழைத்து வளராது என்று அவர் கருதினார். பட்டுப் போகவும் கூடும் என்று அஞ்சினர். அதிலேயும் நாங்கள் மன ஒற்றுமையுடையவர்களாயிருக்கிறோம். எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்தே இராமலிங்க வள்ளலாரிடம் பக்திகொண்டு வந்திருக்கிறேன். எனக்குள்ள சூழ்நிலையில் அது எளிதில் இயல்வதாகும். ஆனால், தொழிலதிபர்களிலே தலை சிறந்தவராக விளங்கும் அன்பர் மகாலிங்கம் அவர்கள் வள்ளலார் பக்தராக இருப்பது வியத்தற்குரியதுதான். இராமலிங்கர் பணிமன்றம் என்னும் நிறுவனத்தின் தலைவராக இருந்து அவர் ஆற்றிவரும் அரும் பணிகளை நான் நன்கு அறிவேன். நேரத்தைப் பணமாக்கும் துறையினரோடு தொடர்பு கொண்டுள்ள அவர், சன்மார்க்க நெறிக்காகவும் நேரத்தை செலவழிப்பது பாராட்டத்தக்க ஒன்றாகும்.
ஆண்டுதோறும் இராமலிங்க சுவாமிகள், காந்திஅடிகள் ஆகிய இரு பெரும்ஞானியரின் பிறந்தநாள் விழாக்களை ஒருசேர நடத்தி வருகிறார் அன்பர் மகாலிங்கம். அந்த வகையில் அவருக்கிணையாகச் சொல்ல தமிழ்நாட்டில் இன்னெருவரில். எனது வாழ்நாளிலே எனக்கு ஏற்பட்ட ஒவ்வொரு வாய்ப்பிலும் அன்பர் மகாலிங்கம் அவர்களைப் பாராட்டி எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ளத் தவறியதில்லை அவர் திறமைமிக்க நண்பர் குழாம் ஒன்றையும் பெற்றிருக்கிறார். அவர் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு துறையிலேயும் ஒவ்வொரு நண்பர் குழாம் அவருக்கு இருந்துவரக் காண்கிறேன். அனுமன், சுக்கிரீவன், அங்கதன், வீடணன் ஆகிய நண்பர் குழாம் இராமனுக்குக் கிடைக்கவில்லையானால், அயோத்தி இராமன் கூடக் காப்பிய நாயகனாக வந்திருக்க முடியாது. காந்தி அடிகளும், நேரு, படேல், இராஜாஜி, இராஜன்பாபு போன்ற ஆற்றல் மிக்க தோழர்களைப் பெற்றிருந்ததாலேயே சுதந்திர இந்தியாவின் தந்தை என்னும் பேற்றினை அவர் பெற முடிந்தது. அவர்களைப் போலவே திறமைமிக்க தோழர் குழாங்களைப் பெற்றுள்ள அன்பர் மகாலிங்கம் எதிர்காலத்தில் இன்றிருப்பதை விடவும் மேலும் சிறந்த முறையில் மிளிர்ந்து வளர்ந்து தமிழகத்துக்குப் பெருமை தேடுவார் என்று நம்புகிறேன்.
– சிலம்புச்செல்வர் திரு.ம.பொ.சிவஞானம்
[தமிழறிஞர், பத்திரிக்கையாளர், எழுத்தாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்]