பல ஆண்டுகளுக்கு முன் சென்னையில் சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் ஒரு கார் பழுதடைந்து நின்றது, காரின் சொந்தக்காரர் எனக்குத் தெரிந்தவர். அவர் வழக்கமான புன்முறுவலுடன் வரவேற்றுப் பேசினார்.
இரண்டு இளைஞர்கள் காரைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரை, இவன்தான் என் மகன். என்ஜினீரிங் காலேஜில் படித்துக் கொண்டிருக்கிறான்.” என்று மிகப் பெருமையுடன் அறிமுகப்படுத்தினார்.
தமது ஒரே மகன் இன்று பேரும் புகழும் பெற்று விளங்குவதைக் கண்டால், அமரர் நாச்சிமுத்துக் கவுண்டர் அவர்கள் அளவற்ற பெருமையடைந்திருப்பார். தமிழ்நாட்டில் மகாலிங்கத்தை விடப் பெரும் பொருள் ஈட்டுபவர்கள் பல உண்டு. ஆனால் புகழ் ஈட்டுவதிலே மகாலிங்கம் முன்னணியில் திகழ்கிறார். அவர் புகழ் கடல் கடந்தும் பரவியிருக்கிறது.
பிஜித் தீவில் 35 ஆண்டுகளாக ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவராகப் பணியாற்றிவரும் சுவாமி ருத்ராநந்தர், சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டுக்கு வந்தார். அவர் சென்றமுறை இந்தியாவுக்கு வந்து 22 ஆண்டுகள் ஆயின.” பிஜித்தீவில் ஒரு குன்றின் மீது தென்னாட்டுக் கோயிலைப் போல் ஒரு கோயில் கட்ட வேண்டும். அதற்கு மலை ரயில் அமைக்க வேண்டும். ஏராளமான புதிய விக்கிரகங்கள் வேண்டும். விவேகானந்த உயர் பள்ளிக்குப் பல பொருள்கள் வேண்டும்” என்று சென்னைக்கு வந்த உடனேயே சுவாமி என்னிடம் கூறினர்.
“மகாலிங்கம் எங்கேயிருக்கிறார்?” என்றார் சுவாமி. “எந்த மகாலிங்கம்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். “பொள்ளாச்சி மகாலிங்கம் என்று ஒருவர் இருக்கிறார். அவர் மனம் வைத்தால் பிஜித் தீவுக்கு வேண்டிய அனைத்தையும் அவர் ஒருவரே கொடுத்துவிட முடியும் என்று நான் புறப்படுவதற்கு முன் பிஜித் தீவில் என்னிடம் சொன்னார்கள் என்றார் ” சுவாமி ருத்ராநந்தர்.
தமிழக அரசின் திட்டக்குழு உறுப்பினராக மகாலிங்கம் அவர்கள் ஆற்றும் பணிகள் சிறந்தவை. நிபுணர்கள் கூட்டத்தில், அடக்கமாகத் தம் கருத்துக்களை வெளியிடுகிறார். விஷயங்களை ஊன்றி சிந்திப்பதால், ஏதேனும் ஒரு புதிய கருத்தையோ அல்லது திடீரென்று ஒரு புரட்சியான கருத்தையோ வெளியிடுகிறார். அதனை ஏற்கலாம்; அல்லது மறுக்கலாம். ஆனால், அவற்றின் ஆழ்ந்த கருத்துக்கள் புறக்கணிக்க முடியாத அளவுக்கு ஆராய்ச்சிக்கு உரியவை.
– திரு. அ. க செட்டியார்
ஊடகவியலாளர், எழுத்தாளர்