“பொன் உள்ளத்திற்குப் பல்லாண்டு” என்ற தலைப்பில் எழுத்தாளரும், தமிழறிஞரும், இசை வல்லுனருமான பத்மபூஷன் திரு. பெ. தூரன் அவர்கள் அருட்செல்வரின் 50 ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு எழுதிய கட்டுரை. . .
“நூறு இளைஞர்கள் வேண்டும். ஆர்வமும், எஃகு போன்ற மனவலிமையும் உள்ள நூறு இளைஞர்கள் இருந்தால் இந்த நாட்டை மிக விரைவிலே மாற்றி அமைத்து விடுவேன்” என்று வேதாந்தகேசரியாகிய சுவாமி விவேகானந்தர் முழங்கினார். அந்த வீர வாசகத்தைப் படித்ததும் இதோ ஓர் இளைஞர் இருக்கிறார் என்ற எண்ணம் என் உள்ளத்திலே பளிச்சென்று உதயமாயிற்று. ஆம் திரு. நா. மகாலிங்கம் அவர்களை முதன் முதலில் சந்தித்த போது இந்த உணர்ச்சிதான் என் உள்ளத்திலே எழுந்தது.
பல சமயங்களில் முதலில் எழுந்த எண்ணம் நெருங்கிப் பழகப்பழக வலிமை குறைவதோடு மழுங்கியும் போவதுண்டு. ஆனால், இவரோடு நான் பழகப்பழக இந்த எண்ணம் வலிமை ன் அடைந்துகொண்டே இருக்கிறது.
தந்தையார் ஈட்டிய செல்வம் எத்தனையோ மக்களைப் புலன் வழி இழுத்துத் தாறுமாறாகச் செல்லத் தூண்டிவிடுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். ஆனால், அன்பர் திரு. மகாலிங்கம் தாம் பெற்ற செல்வத்தால் தடம் புரளவில்லை. இளமை இருக்கிறது. வேண்டிய வசதிகள் அனைத்தும் இருக்கின்றன. விரும்பியது எளிதில் கிடைக்கும். பொறி வழியே போக வேறென்ன வேண்டும்? ஆனால் அவர் அவ்வாறு ஐம்புல வேடர்களுக்கு அடிமையாகவில்லை. இதுவே போதும் அவரைப் பாராட்டுவதற்கு. திரு. மகாலிங்கத்தின் உள்ளத்திலே மாறாத பக்தி இருக்கின்றது. உயர்ந்த லட்சியம் இருக்கிறது. சிறந்த பண்பு இருக்கிறது. இழிந்தது எதையும் இயல்பாகவே வெறுக்கும் சீரிய உள்ளத் தூய்மை இருக்கின்றது. இவற்றால் இவர் நிலையிற் கலங்காது உன்னத நெறியிலே நாட்டம் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம்.
தாய்தந்தையரிடத்தே இருந்த பக்தியும் இவருக்கு உறுதுணையாக உதவிற்று என்றும் நான் கருதுகிறேன். தந்தையார் தொடங்கிய தொழிலைத் தொடர்ந்து நடத்தியதோடு, வெவ்வேறு தொழில்களில் நுழைந்து வெற்றி பெற இவர் கற்ற கல்வி உதவிற்று.
பொள்ளாச்சி அருள் மாரியம்மன் இவரது குடும்பத்தை அருளோடு நோக்கிக் காக்கும் தெய்வமாகவே வாய்த்திருக்கின்றாள். தாம் வசிக்கும் இல்லம் சக்தி நிலையமாகத் தழைத்தது. பல தொழில் நிறுவனங்களும் சக்தியை முன் நிறுத்தித் தோன்றலாயின. இவற்றால் பெற்ற பொருளைத் திரு. மகாலிங்கம் தம் நலத்திற்கும் போகத்திற்கும் மட்டும். உரியது என்று எண்ணாமல் இருப்பது இவரிடமுள்ள மற்றொரு பெருஞ் சிறப்பாகும். ஊருணி நீர் நிறைந்ததுபோல இவர் வாழ்க்கை அமைந்து பொலிவதாயிற்று.
தந்தையார் நினைவாகக் கல்வி நிலையங்களை அமைத்தார். அதுமட்டுமல்ல, தகுதிவாய்ந்த மாணவர்கள் இவருடைய உதவியை நாடி வந்தால் ஏதோ ஒரு வகையில் உதவி பெறாமல் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றதை நான் கண்டதில்லை.
திரு. மகாலிங்கத்தின் உள்ளத்திலே அருட்பிரகாச வள்ளலாரும். காந்தி அடிகளும் அருள் வடிவாகிய பராசக்தியும் இளமையிலேயே நிலைத்து விட்டார்கள். ஆகவே, இவருடைய நோக்கமும் செய்கையும் உன்னதமாக உருவாகத் தொடங்கின.
சென்னையிலே வள்ளலாருக்கும் காந்தி அடிகளுக்கும் இவரைப்போல விழாக் கொண்டாடுபவர்கள் இல்லை என்பதை அனைவரும் அறிந்து போற்றுகிறார்கள். இந்த விழாக்கள் ஆண்டு தோறும் புதுப்புது அம்சங்களைத் தாங்கிப் பல ஆயிரம் மக்களுக்கு வள்ளலாரும் காந்தியும் இந்த நாட்டில் பிறந்து இந்த மண்ணில் நடந்தவர்கள்தாம் என்பதை நினைவூட்டி நன்னெறிப்படுத்தி வருகின்றன.
அன்பர் மகாலிங்கத்திடம் மற்றொரு அரிய பண்பை நான் கண்டு பெரிதும் மகிழ்ந்திருக்கிறேன். நல்ல பணி எதுவானாலும் சரி, அதற்குத் தம்மாலான உதவியைச் செய்வதற்கு ஆர்வத்தோடு முன்வருகின்ற அருங்குணம் இவரிடத்திலே இயல்பாக அமைந்திருக்கிறது. இவரே அதைச் செய்து முடிக்க முன் வருவார்; அல்லது தமது பங்கைத் தாராளமாக உதவுவதில் இன்பம் காண்பார்.
சென்னையை அவர் முக்கிய வாசஸ்தானமாகக் கொண்ட வெகு விரைவிலேயே ஏதாவது ஓர் இலக்கியப்பணி அல்லது வேறு மற்ற நல்ல பணி என்றால் இவரிடத்திலே சென்றால் ஆதரவு கிடைக்கும் என்று மக்கள் அறிந்துகொண்டார்கள். தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் முதலிய பலருக்கு இரண்டாமவர் அறியாமல் இவர் பொருள் உதவி செய்வார்.
‘பெரிதினும் பெரிது கேள்’ என்றார், பாரதியார். திரு. மகாலிங்கம் திட்டம் வகுத்தால் அத்திட்டம் பழநி ஆண்டவன் திருக்கோயிலுக்காக இருந்தாலும் சரி, பட்டணத்து இட நெருக்கடியைச் சமாளிக்கக் குடியிருப்பு வசதிகள் செய்வதாயினும் சரி எதிர்பார்த்ததை விடப் பெரியதாகவே அமையும். அதை வேகமாக நடைமுறையில் கொண்டு வருவதற்கும் துடிப்போடிருப்பார். பெரிய திட்டங்கள் வகுப்பது எளிது. அவற்றை நிறைவேற்றும் துணிச்சலும், உற்சாகமும் இவரிடம் காணப்படுகின்றன.
இந்தியாவிலுள்ள பெரிய நகரங்களுக்கெல்லாம் அவற்றை விரிவுபடுத்தும் திட்டம் ஒன்றை அண்மையிலே இவர் விளக்கிக்கொண்டிருந்தார். கோடி கோடியாகப் பொருள் வேண்டும் என்று இவர் மலைக்கவில்லை. முறையில் அவற்றைச் சாத்தியமாக்க முடியும் என்ற நிச்சயத்தோடும் தெளிவோடும் அன்பர் நா. மகாலிங்கம் அவர்கள் உணர்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தார். வேகத்தோடு எத்தனையோ தொழில்கள், எத்தனையோ திட்டங்கள் – இவை எல்லாவற்றையும் இவர் ஒருவரே நேராக இருந்து நடத்த இயலுமா என்ற ஐயம் நமக்கு இயல்பாகவே எழும். ஆனால் இவர் தக்கவர்களைப் பொறுக்கி எடுத்து அவர்களிடத்திலே முழுப்பொறுப்பையும் கொடுத்து அவர்களுக்கு வழிகாட்டியாக நின்று பணியை நிறைவேற்றுவதில் பெரிதும் நம்பிக்கை உடையவர். ஒருவரை ஒரு பணிக்காகத் தேர்ந்தெடுத்துவிட்டால், பிறகு அனாவசியமாக அவர் அதிலே தலையிடுவதில்லை. ஒரு சில சமயங்களில் இதில் ஏமாற்றம் ஏற்படக் கூடும். என்றாலும் பொதுவாக இவர் பல பணிகளை ஏற்று நடத்தி வெற்றி காண்பதற்கு இதுவே நல்ல உபாயமாக அமைந்திருக்கிறது.
அதிகாலையில் எழுந்து உறங்கச்செல்லும் வரை திரு. நா. மகாலிங்கம் அவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாகக் காரியங்களைக் கவனிப்பதைக் கண்டு நான் வியந்திருக்கிறேன்.
எண்ணித் துணிவதிலும், துணிந்ததும் அதற்கு வேண்டியதைச் செய்வதிலும் அவர் காட்டும் வேகம் எல்லாருக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.
திருவான்மியூர் திரிபுரசுந்தரி அம்பாளின் சந்நிதி ஆயிரம் ஆண்டுகளாகப் புனருத்தாரணம் செய்யாமல் கிடக்கிறது என்று ஒரு தடவை அவரிடம் நான் பேச்சுப் போக்கில் குறிப்பிட்டேன். மீண்டும் ஒன்றிரண்டு முறை சொல்லியிருக்கலாம்-எனக்குச் சரியாக நினைவில்லை. ஒரு நாள் இவரை இவருடைய இல்லத்தில் வேறு ஏதோ ஒரு விசயமாகச் சந்திக்கச் சென்ற போது, “அம்பாளுடைய கோயில் திருப்பணிக்கு ஆகும் செலவை நானே ஏற்றுக்கொள்ள உத்தேசித்திருக்கிறேன். இந்த மழைக்காலம் முடிந்ததும் திருப்பணி தொடங்கிவிடும். அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்துவிட்டேன்” என்று என்னிடம் கூறினார் கூறியது போலவே இப்பொழுது திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது.
திருவான்மியூரில் ராஜகோபுரம் முதலிய திருப்பணிகளுக்கு திரு நா. மகாலிங்கம் தலைமையில் ஒரு குழு அமைந்திருக்கிறது. ஓரளவு வேலையும் நடந்திருக்கிறது. ஆனால், அதை முடிக்குமட்டும் திரிபுரசுந்தரி அம்பாளுக்குச் செய்யவேண்டிய திருப்பணியைச் செய்ய இவர் காத்திருக்கவில்லை. அண்டங்கள் எல்லாம் ஈன்றெடுத்தும் கன்னியென மறைபேசும் பராசக்தியிடம் இவருக்குள்ள ஈடுபாட்டை இது காண்பிக்கிறது. வேகமாகக் காரியங்கள் நடைபெறவேண்டும். என்ற உள்ளத் துடிப்பையும் இது நன்கு வெளிப்படுத்துகிறது. இப்படி இவர் உதவிசெய்த திருப்பணிகள் மிகப் பலவாகும்.
அன்பர் மகாலிங்கம் காந்தியக் கொள்கைகளில் ஊறியவர் என்று முன்பே குறிப்பிட்டேன். அதனால் இவருடைய செயல்களிலே அக்கொள்கைகள் இயல்பாகவே மேலோங்கி நிற்கின்றன. மேலும் இவர் காஞ்சிப் பெரியவர்கள். திருவலம் மெளன சுவாமிகள் போன்ற பல மகான்களிடம் பெரிதும் ஈடுபாடு உடையவர். ஆகவே, அவர்களுடைய சத்சங்க உயர் நோக்கும் இவர் வாழ்க்கையில் பிரதிபலிக்கக் காண்கிறோம்.
இவ்வாறு நிறைகுணத்தவரும், ஈந்துவக்கும் சிந்தையை உடையவரும், நல்லது செய்ய ஆர்வத்தோடு காத்திருப்பவரும் இன்றைய அரசியலிலே ஏற்றுக்கொள்ளப் படாததால் இவருக்கு நட்டம் இல்லை. ஆனால், அரசியல் இழந்த ஒரு பொன்னான உள்ளம் படைத்தவரை மற்ற எத்தனையோ பணிகள் சொந்தமாகக்கொண்டு பயன் பெற்று வருகின்றன.
தமது ஐம்பது ஆண்டு வாழ்க்கையில் அவர் சாதித்துள்ளவற்றை எண்ணும்போது வியப்படைகின்றோம். இவ்வளவு சாதித்திருக்கிறோம் என்ற தன்முனைப்பே இல்லாது மேலும் பொதுப்பணிகளை வரவேற்கும் ஆர்வத்தை அவரிடம் நான் காண்கிறேன். கல்வி சமுதாய நலத்திட்டம். தொழில் அபிவிருத்தி முதலிய பல துறைகளில் இவர் துணிச்சலும், புரட்சிகரமானவையுமான கருத்துக்களை உடையவர் என்பதை நன்குணர்ந்து பயன்படுத்திக் கொண்டால் நாட்டுக்கு நலன் பல விளையும் என்பது திண்ணம்.
அன்பர் மகாலிங்கம் அழகுணர்ச்சி மிக்கவர் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இவர் ஒரு பெரிய தொழிலதிபராக இல்லாவிட்டால் ஒரு பெரிய ஓவியராகவோ, கலைஞராகவோ சிறந்து விளங்கியிருப்பார் என்று அவர் கொண்டாடும் விழாக்களை அறிந்தவர்கள், கண்டு களித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள். இந்தக் கலையுள்ளம் புதியது படைக்கும் ஆற்றல் வாய்ந்தது. ஆகவே, அதனைப் பொன்னெனப் போற்றுகிறேன். அதே சமயத்தில் என் உள்ளத்தின் உணர்ச்சிகளை, பாராட்டுதல்களை முழுமையாகவே எழுத்தில் வடிக்க முடியவில்லையே நினைப்பு மேலெழுகின்றது.
எந்த இடத்திலே இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கவேண்டும். சொல்லியது குறைவு என்ற உணர்ச்சி ஏற்படுகிறதோ அங்கு தனிப்பட்ட பெருமை நிச்சயமாக இருக்கும் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.
அன்பர் மகாலிங்கம் செயற்கரிய செயல்கள் செய்து மேலும் ஓங்குக. அவருக்கு அதற்குவேண்டிய எல்லா சக்திகளையும், இறைவன் அருளவேண்டும் என்று பிரார்த்தித்துப் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.